திருச்சியில் 483 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
திருச்சியில் 483 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணி சாலை காமாட்சியம்மன் கோவில் பகுதியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஒரு குடோனில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள 483 கிலோ 600 கிராம் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் காவல்காரத்தெருவை சேர்ந்த கோபி (வயது 28), தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செந்தில் (34) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குட்காவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்காவையும், சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.