கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.46¼ லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை வாலிபர் கைது


கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.46¼ லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை வாலிபர் கைது
x

கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த ரூ.46 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை வாலிபரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ஆனால் அதில் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அவரிடம் இருந்த டிராலி சூட்கேசில் ஜிப் பகுதியில் தையல் போடப்பட்டதுபோல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த தையலை பிரித்து பார்த்தனர்.

அதில் தங்கத்தை கம்பிபோல் மாற்றி சூட்கேசுக்குள் மறைந்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது. ரூ.46 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story