இன்று நடைபெற உள்ள கருணாநிதி நினைவு மாரத்தானில் 43 ஆயிரம் பேர் பங்கேற்பு


இன்று நடைபெற உள்ள கருணாநிதி நினைவு மாரத்தானில் 43 ஆயிரம் பேர் பங்கேற்பு
x

சென்னையில் இன்று நடைபெற உள்ள கருணாநிதி நினைவு மாரத்தானில் 43 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

மாரத்தான்

தமிழக இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் ஓட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக மெய்நிகர் மாரத்தானாக நடத்தப்பட்டது.

2020-ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 28 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 541 பேரும், 2021-ம் ஆண்டு 37 நாடுகளை சேர்ந்த 19 ஆயிரத்து 591 பேரும் பங்கேற்றனர். கடந்த 2 ஆண்டுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தின் பதிவுக்கட்டணம் முழுவதும் முறையே ரூ.23 லட்சத்து 41 ஆயிரம் மற்றும் ரூ.56 லட்சத்து 2 ஆயிரம் தமிழக அரசின் கொரோனா நிதிக்கு வழங்கப்பட்டது.

43 ஆயிரத்து 320 பேர்

2022-ம் ஆண்டுக்கான மாரத்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆகும். இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43 ஆயிரத்து 320 பேர் பதிவு செய்து கலந்து கொண்டு ஓடுகிறார்கள். இதில் 10 ஆயிரத்து 985 பேர் பெண்கள்

இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ. ஆகிய 4 ஓட்டங்களில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கான ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்குகிறார். மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம், முதல்-அமைச்சர் ஒப்படைக்கிறார். இந்த நிகழ்வில் முதல்-அமைச்சரோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story