தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக கோபுரங்கள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக கோபுரங்கள் அமைத்தும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலைமோதும் மக்கள் கூட்டம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்குகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டை, டவுன், ஸ்ரீபுரம், மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது.

வண்ணார்பேட்டையில் சாலையோரம் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் பைபர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்டர் மீடியன்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு கோபுரங்கள்

நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அடியில் சிறப்பு புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தனியார் பஸ் கம்பெனி மேலாளர்கள், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், நான்குபுறமும் கேமராக்கள் பொருத்திய வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளன. இதில் அனைத்து திசைகளில் பதிவாகும் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கண்காணிக்கின்றனர்.

இதேபோன்று மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். நெல்லை மாநகரில் 1,200 போலீசார், 800 ஊர்க்காவல் படையினரும், புறநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வெளியூர்களில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று ஏராளமானோர் பஸ், ரெயில்களில் புறப்பட்டு வந்தனர். அவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ்களை இயக்கவும் நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story