தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்
தமிழகத்தில் புதியதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்
ஆற்காடு
தமிழகத்தில் புதியதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
பணப்பலன்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு போக்குவரத்து பணிமனையில் வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மண்டல போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு பணப்பலன் வழங்குதல், டிரைவர்களுக்கு கையேடு வழங்குதல், ஆற்காடு பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன.
கலெக்டர் ச.வளர்மதி தலைமை தாங்கினார். ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயஸ் வரவேற்றார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆற்காடு பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மண்டலத்தைச் சார்ந்த 214 ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.55.05 கோடி மதிப்பிலான காசோலைகள் மற்றும் ஓட்டுனர்களுக்கான கையேடுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்கள் தேர்வு
போக்குவரத்து தொழிலாளர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கருணாநிதி. அவர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை நாட்டு உடைமையாக்கப்பட்டது. இன்று போக்குவரத்து துறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
கிராமங்கள்தோறும் மக்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருவது போக்குவரத்து துறை.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது அரசு விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகம் ஆகியவற்றிற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்புகள் வரும்.
4 ஆயிரம் பஸ்கள்
இந்த ஆண்டு தமிழகத்தில் புதியதாக 4 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும். புதுப்பிக்கப்பட்ட 125 பஸ்களை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். போக்குவரத்து கழக ஊழியர்களின் சிரமங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
மகளிருக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் போக்குவரத்து துறை மக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் புதிய பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணிப்பேட்டை கோட்டம்
விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபடுபவர். அவர் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தொழிலாளர்கள் விட்டுக் கொடுத்து பணிகளை செய்ய வேண்டும்.
உடல் நலிவுற்றவர்களுக்கு தகுந்த பணி வழங்கி ஒத்துழைக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழகத்தில் ராணிப்பேட்டை கோட்டம் உருவாக்க வேண்டும். தமிழக மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
விழாவில் வேலூர் மண்டல மேலாளர் கணபதி, காஞ்சீபுரம் மண்டல மேலாளர் தட்சணாமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் ஆற்காடு தேவி பென்ஸ்பாண்டியன், மேல்விஷாரம் எஸ்.டி.முகமதுஅமீன்,
ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்க வேலூர் மண்டல தலைவர் மணி, பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ், பொருளாளர் கிருஷ்ணன், மத்திய சங்க துணை தலைவர் கு.பலராமன் அமைப்புச் செயலாளர் ராமசாமி, சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.