400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு


400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு
x

நரிக்குடி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

வீரக்கல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கட்டனூர் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரியான பொன்ராஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன், வயலூர் குமரன் மற்றும் க.புதுக்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 400 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. நடுகல் என்பது போர்களில் வெற்றி பெற்ற அல்லது வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக கற்களில் எழுப்பப்படும் சிற்பங்களாகும். இதனை வீரக்கல் என்றும் கூறுவர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லானது 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட புடைப்பு சிற்பங்களாக காணப்படுகிறது.

வீரனின் முழு உருவம்

மேலும் நடுகல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் நாசிக்கூடும், இடதுபுறம் கொண்டை சரிந்து, இடையில் கச்சையுடன் கூடிய குறுவாளும், காதுகளில் அணிகலன்கள் மற்றும் மார்பில் ஆபரணங்கள் அணிந்தவாறு தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இரு கைகளையும் கூப்பியவாறு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் கூறுகையில், ஒரு வீரனின் நடுகல் சிற்பத்தையும், மற்றொரு வீரனின் முழு உருவ சிற்பத்தையும் வைத்து பார்க்கும்போது அதில் ஒரு வீரனின் பெயரானது சந்தன சூரன் சதா சேர்வை என அறிய முடிகிறது.

மேலும் இரண்டு சிற்பங்களின் அமைப்பு மற்றும் அடையாளங்களை வைத்து பார்க்கும் போது நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இரு வீரர்களும் போரில் சிறந்து விளங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும் எனவும், அதன் காரணமாக இருவரின் நினைவாக நடுகல் அல்லது வீரக்கல்லாக எழுப்பிருக்கலாம் எனவும் தெரிகிறது.

இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் போர்களிலும், கால்நடைகளை பாதுகாக்க விலங்குகளிடம் போர் புரிதல், வாள்வீச்சு, வாள்சண்டை போன்ற பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story