400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பூட்டுத்தாக்கில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்ய்ப்பட்டது.
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு கீதா அறிவுறுத்தலின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் ஏட்டுகள் அருள், விருமாண்டி ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பூட்டுத்தாக்கில் இருந்து திருவலம் நோக்கி சென்ற ஆட்டோவை மறித்தனர். போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 33) என தெரியவந்தது. ஆட்டோவை சோதனை செய்ததில், 8 மூட்டைகளில் சுமார் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர். மேலும் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.