விழுப்புரத்தில் எண்ணெய் ஆலையில் 4 டன் அரிசி பறிமுதல் ரேஷன் அரிசியா? குடிமைப்பொருள் அதிகாரிகள் விசாரணை


விழுப்புரத்தில் எண்ணெய் ஆலையில் 4 டன் அரிசி பறிமுதல் ரேஷன் அரிசியா? குடிமைப்பொருள் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் எண்ணெய் ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் அரிசி ரேஷன் அரிசியா என்பது குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மகாராஜபுரத்தில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் தனி தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் தயாளன், வருவாய் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், லட்சுமிநாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த எண்ணெய் ஆலையில் சோதனை நடத்தினர்.

4 டன் அரிசி பறிமுதல்

அப்போது அங்கு 80 சாக்கு மூட்டைகளில் 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட அரிசி, மிக நுண்ணிய அளவில் பொடியாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த அரிசியை பார்ப்பதற்கு ரேஷன் அரிசி போன்றே இருந்தது. ஆனால் அந்த அரவை மில்லின் உரிமையாளர், இது ரேஷன் அரிசி இல்லை என்றும், புண்ணாக்கு தயாரிப்பதற்காக வெளியில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வந்து வைத்துள்ளதாகவும் அதிகாரிகளிடம் கூறினார். இருப்பினும் சந்தேகத்தின்பேரில் அந்த 4 டன் எடையுள்ள அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மிக நுண்ணிய அளவில் அரிசியை பொடியாக்கி வைத்துள்ளதால் அது ரேஷன் அரிசி தானா, அல்லது வெளியில் இருந்து கடைகளில் வாங்கப்பட்ட அரிசியா என்பதை கண்டறிய குடிமைப்பொருள் வழங்கல் மண்டல தரக்கட்டுப்பாடு ஆய்வாளருக்கு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் அது ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story