ஆவின் பால் விலையை 4 முறை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது; தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
ஆவின்பால் விலையை 4 முறை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
குலசேகரம்,
ஆவின்பால் விலையை 4 முறை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
அண்ணா பிறந்த நாள் கூட்டம்
குலசேகரம் சந்தை சந்திப்பில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருவட்டார் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிமால் தலைமை தாங்கினார். குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ராஜ் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், அவைத்தலைவர் சிவகுற்றாலம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், ஒன்றிய துணை செயலாளர் அண்ணா, பொன்மனை பேரூர் செயலாளர் மோகன்குமார், திற்பரப்பு பேரூர் செயலாளர் விஜூகுமார், திற்பரப்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
ஆவின் பால் உயர்வு
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் பால்விலை உயர்ந்து விட்டது என்று சொன்னால் தனியார் பால் விலையை விட குறைவாகத்தான் உள்ளது என அமைச்சர் பதில் சொல்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை ஆவின் பால் விலையை தி.மு.க. அரசு உயர்த்தியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஆவின் நிறுவனம் முடங்கும் நிலைக்கு வந்துவிடும்.
இப்போது குவாரிகள் வைத்திருப்போர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அமலாக்கத்துறை சோதனை வரும் என்று சொல்லப்படுகிறது. மனோ தங்கராஜ் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த போது குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வரும் என்றார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இப்போது எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.