அண்ணாமலை பல்கலைக்கழக அணி உள்ளிட்ட 4 அணிகள் அகில இந்திய போட்டிக்கு தகுதி
பெண்கள் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றஅண்ணாமலை பல்கலைக்கழக அணி உள்ளிட்ட 4 அணிகள் அகில இந்திய போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி கடந்த 29-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
இதில், நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி போட்டியில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணியை 6-0 என்கிற கணக்கிலும், சென்னை வேல்ஸ் இண்டாஸ் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக அணியை 5-4, அண்ணாமலை பல்கலைக்கழக அணி புதுவை பல்கலைக்கழக அணியை 10-0 என்கிற கணக்கிலும் வீழ்த்தின. இதேபோன்று, பாரதியார் பல்கலைக்கழக அணி, பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை 4-2 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. இதன் மூலம் வெற்றி பெற்ற 4 பல்கலைக்கழக அணிகளும் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.
அதேபோல் இந்த 4 அணிகளும், குவாலியரில் நடைபெறும் அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே லீக் சுற்றிலும் எஞ்சியுள்ள போட்டிகள் நேற்று நடந்தது. இதில், அண்ணாமலை பல்கலைக்கழக அணி, பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை (5-0) என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் சென்னை வேல்ஸ் இண்டாஸ் பல்கலைக்கழக அணி, பெரியார் பல்கலைக்கழக ஆகிய இரு அணிகளும் கோல் எதும் அடிக்காமல் சமநிலையில் போட்டி நிறைவு பெற்றது. தொடர்ந்து, இன்றுடன் நடைபெறும் லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறுகிறது.