கஞ்சா பதுக்கிய 4 பேருக்கு சிறை
கஞ்சா பதுக்கிய 2 வழக்குகளில் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
கஞ்சா பதுக்கிய 2 வழக்குகளில் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
கஞ்சா வழக்கு
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கம்பம் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். அப்போது கம்பம், மனிக்கட்டி ஆலமர ரோடு, 18-ம் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்றவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் 21 கிலோ கஞ்சாவை பதுக்கியது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாைவ பறிமுதல் செய்ததுடன், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (வயது 30), ஜெயசூர்யா (27), நவீன்குமார் (37) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு முதலாவது சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார்.
10 ஆண்டு சிறை
கைதான 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.
இதேபோல 2009-ம் ஆண்டில் தேனி மாவட்டம் சின்னமனூர் பஸ்நிலையத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் நின்று இருந்த கோட்டைச்சாமி (52) என்பவரை தேனி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு வழக்கு
அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கிலும் அரசு வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார்.
தண்டனை பெற்ற கோட்டைச்சாமி மற்றொரு கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நேற்றைய வழக்கிற்காக அவரை புழல் சிறையில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர்.