சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி


சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் மின்வாரிய ஊழியர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்,

கார் - மோட்டார் சைக்கிள் மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 51). கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (45). இவர்கள் இருவரும் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர்கள் இருவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கடம்பாடி அருகே செல்லும்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஆனந்தன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பலராமன் படுகாயம் அடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பலராமனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பலராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் ( 19). சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (17). பனையூர் அம்பேத்கர் தெருவை விக்னேஷ் (18). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தனர். கீழ் படப்பை அருகே சாலை வலைவில் திரும்பிய கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் உதயகுமார், லோகேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story