கடலூர் காப்பக கதவை உடைத்து 4 பேர் தப்பி ஓட்டம் விக்கிரவாண்டி ஆசிரமத்தில் மீட்கப்பட்டவர்கள்


கடலூர் காப்பக கதவை உடைத்து 4 பேர் தப்பி ஓட்டம் விக்கிரவாண்டி ஆசிரமத்தில் மீட்கப்பட்டவர்கள்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு கடலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் 4 பேர் கதவை உடைத்து தப்பி ஓடிவிட்டனர்.

கடலூர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கியதும், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆசிரமத்தை நிர்வகித்து வந்த ஜூபின்பேபி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேர் பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர்பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் மனநல காப்பகத்திலும், 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் மாயம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வன்னியர்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு தூங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி விக்கிரவாண்டியில் இருந்து வந்திருந்த 13 பேர் முதல் தளத்தில் உள்ள அறைக்கு தூங்க சென்றனர். மேலும் காப்பக ஊழியர்கள், தனி அறையில் படுத்து தூங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே ஊழியர்கள் நேற்று காலை எழுந்து பார்த்த போது, முதல் தளத்தில் உள்ள பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக போர்வையும் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் விக்கிரவாண்டி ஆசிரமத்தில் இருந்து தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 4 பேரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பக ஊழியர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கதவை உடைத்து ஓட்டம்

அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், 4 பேரும் நள்ளிரவில் காப்பகத்தின் பின்பக்க கதவை உடைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த போர்வைகளை ஒன்றாக சேர்த்து கயிறு போல் திரித்து காப்பகத்தின் தூணில் கட்டி, ஜன்னல் வழியாக கீழே போட்டுள்ளனர்.

பின்னர் போர்வையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக இறங்கி தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் புதுநகர் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story