இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை


இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை
x

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்.

மதுரை,

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. விலைவாசி இன்னும் குறையாததால் அங்கிருந்து அகதிகள் அவ்வப்போது படகுகள் மூலம் தமிழகத்திற்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பேசாளை பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர். இது பற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். 4 பேரிடமும் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், வவுனியா தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார் (வயது 36), அவருடைய மனைவி மேரி, குழந்தைகள் கிருத்திகா (7), கிருஷ்ணா(4) என்பது தெரியவந்தது.

இலங்கையில் இருந்து தப்பி வந்தது குறித்து பிரதீப்குமார், மேரி கூறும்போது, "இலங்கையில் இன்னும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை. வேலை வாய்ப்பும் இல்லை. விவசாயமும் நடைபெறவில்லை. சாப்பாடுகூட கிடைக்காமல் குழந்தைகளுடன் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகின்றனர். நாங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை விற்று ரூ.1 லட்சத்தை படகோட்டிகளிடம் கொடுத்து தமிழகம் தப்பி வந்துள்ளோம் என்றனர்.

பின்னர் இந்த 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்று வந்த 4 பேருடன் சேர்த்து கடந்த சில மாதங்களில் இதுவரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 275 பேர் அகதியாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story