ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை- கள்ளக் காதலி உள்பட 4 பேர் கைது


ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை- கள்ளக் காதலி உள்பட 4 பேர் கைது
x

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி இ.பி.ரோடு கருவாட்டுப்பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணிக்குமார் (வயது 24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜோதி(40) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜோதிக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி, 2 கணவர்களும் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதேஷ்(19) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் பரணிக்குமாரும், ஜோதியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து பரணிக்குமாருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் பெண் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக பரணிகுமாருக்கும், ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவிலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரணிக்குமார், ஜோதியை தாக்கியுள்ளார். இதைக்கண்ட மாதேஷ் மற்றும் அவரது நண்பனான 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பரணிக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சிங்காரத்தோப்பு நுழைவு வாயில் அருகே வந்த பரணிக்குமாரை பின்தொடர்ந்து வந்த மாதேசும், அந்த சிறுவனும் கத்தியால் அவரது கழுத்தில் குத்தி, கல்லால் தலையில் தாக்கினர். மேலும் ஜோதியின் தந்தையான மனோகரனும்(60), பரணிக்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பரணிக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுபற்றி அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர், பரணிக்குமாரை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரணிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மாதேஷ், மனோகரன் மற்றும் சிறுவனை போலீசார் பிடித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாதேஷ், மனோகரன், சிறுவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாதேஷ், மனோகரன் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்திலும், ஜோதியை மகளிர் சிறையிலும் அடைத்தனர்.


Next Story