ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 4 பேர் ஆஜர்
தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டில் 4 பேர் ஆஜர் ஆகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோா்ட்டில் 4 பேர் ஆஜர் ஆகினர்.
தொழில் அதிபர்
சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன். இவர் தொழில் அதிபர் ரவிச்சந்திரனை கடத்திச் சென்று மிரட்டி மோசடி செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார், ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்தநிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி திருநாவுக்கரசு முன்பு அவர் ஆஜரானார்.
மறு உத்தரவு வரும் வரை ராேஜந்திரன் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.
கையெழுத்திட உத்தரவு
அதேபோல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி அங்காள ஈஸ்வரி, தங்க முனியசாமி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். நீதிபதி திருநாவுக்கரசு அவர்கள் 3 பேரையும் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் தனக்கு முன் ஜாமீன் வேண்டி விருதுநகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனுவை பொறுப்பு நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.