கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் 4 புதிய கூட்டுறவு வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 118 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து இலாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. சென்னையில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்து வரும் இவ்வங்கி தற்போது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வங்கி, 2022-23ம் நிதியாண்டில், 31,484 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு, 114.78 கோடி ரூபாய் நிகர இலாபமாக ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் முதலீடுகள் ரூ.4,615 கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12,486 கோடியாகவும் உள்ளது. இவ்வங்கியில் தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் 20.26 கோடி ரூபாய் ஆகும். வணிக வங்கிகளுக்கு நிகராக, வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், துரிதப் பணப்பரிமாற்றச் சேவைகளான RTGS, NEFT, IMPS, UPI, இணையவழி வங்கிச் சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் என அனைத்து கணினிவழி வசதிகளையும் இவ்வங்கி கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமலிருந்த இவ்வங்கியின் கிளைகள், கூட்டுறவுத் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நான்கு புதிய வங்கிக் கிளைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் ந. சுப்பையன், இ.ஆ.ப, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ம. அந்தோணிசாமி ஜான் பீட்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.