ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருபவர் கங்கா (வயது 70). ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியான இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், கங்காவை கத்தியால் வெட்டியதுடன் அவரது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் அவரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டிச்சென்று விட்டனர்.
இது குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது கங்காவின் மகன் மகாதேவன் நடத்தி வரும் நிறுவனத்தில் பணிபுரிந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் மணிகண்டன் அளித்த தகவலின்பேரில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட பல்லாவரத்தை சேர்ந்த துரைப்பாண்டி (41), கீழ்கட்டளையை சேர்ந்த துரைசிங்கம் (35), ரமேஷ் (31), பல்லாவரத்தை சேர்ந்த மணிகண்டன் (38) ஆகிய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
கங்காவின் மகன் மகாதேவன் தனியாக தொழில் செய்து வந்தார். அவரிடம் மணிகண்டன் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தார். மாதந்தோறும் பேசியபடி மணிகண்டனுக்கு மகாதேவன் முறையாக சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த மணிகண்டன், இதுபற்றி தனது நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து குடிபோதையில் இருந்த 5 பேரும் கங்கா வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த அவரை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை அரும்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் கவரிங் நகைகளும் அதிக அளவில் இருந்தது. கைதான 5 பேரிடமும் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.