4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை


4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம்-மரக்காணம் இடையே 4 வழிச்சாலை தரமாக அமைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்

விழுப்புரம்

திண்டிவனம்

நேரில் ஆய்வு

திண்டிவனம் -மரக்காணம் இடையே 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மின்சாரத்துறை அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் பணிகளை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மரத்துக்கு நடுவே சாலை

திண்டிவனம் முதல் மரக்காணம் வரை 7 மீட்டர் சாலையை 14 மீட்டர் சாலையாக அகலப்படுத்த ரூ.320 கோடியில் ஒப்பந்த புள்ளி விடப்பட்டு தமிழக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையை அகலப்படுத்துவதற்கு முன்பாக இடையூறாக உள்ள மரங்கள், மின்கம்பங்களை அகற்றிய பின்னர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் நின்றிருந்த ஜீப், மோட்டார் சைக்கிள், தெரு நடுவில் உள்ள அடிபம்பு ஆகியற்றின் மேலே சாலை போடப்பட்டு வருகிறது. இதையும் தாண்டி தற்போது மரத்துக்கு நடுவே சாலை போடப்படுகிறது.

அரசு எப்படி அனுமதிக்கிறது

மின்கம்பங்கள் அகற்றப்படவில்லை. கமிஷன் பெற்றால் போதும், சாலை எப்படி போட்டால் என்ன? என்ற விதத்தில் பணிகள் நடைபெறுகிறது. இதை அரசு எப்படி அனுமதிக்கிறது என தெரியவில்லை? சாலை போடுவதற்கு முன்பாக 4 அடி பள்ளம் தோண்டி அதில் 1/2, 3/4, ¼ ஆகிய அங்குல ஜல்லிகளை போடப்பட்டு தரமான சிமெண்டு பூசப்பட்டு சாலை அமைக்க வேண்டும். ஆனால் மட்டமான சிமெண்டு கொண்டு பூசப்படுவதால் சாலை தரமாக அமையப்போவதில்லை.

இவ்வாறு அவா் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜுனன், நகராட்சி முன்னாள் தலைவர் வெங்கடேசன், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், கவுன்சிலர் ஜனார்த்தனன், ஒப்பந்ததாரர் டி.கே. குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story