4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்


4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
x

குமரியில் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

நாகா்கோவில்,

நாடாளுமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது கூறியதாவது,

குமரி மாவட்டத்தில் பல மாதங்களாக முடங்கி கிடக்கும் 4 வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் பணி தொடங்காமல் இருக்கிறது. எனவே அந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் கடலரிப்பால் பாதிப்படைகின்றன. இதற்கு கடல் அரிப்பு தடுப்புச் சுவர் எழுப்பி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலில் தவறி விழும் மீனவர்களை மீட்க கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் நீண்ட காலமாக ரெயில்வே துறை சம்பந்தப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவற்றை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story