மந்தகதியில் நடக்கும் 4 வழிச்சாலை பணிகள்
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே மந்தகதியில் நடக்கும் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதாவது இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுசாலையில் இருந்து தொடங்குகிறது.
இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.
சாலை அமைக்கும் பணி
இந்த சாலை விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம், எம்.என்.குப்பம், பாகூர், கடலூர் நகரில் புறநகர் பகுதி வழியாக சென்று கடலூர் முதுநகர் அருகில் உள்ள குடிகாடு அருகே சிதம்பரம் சாலையில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து ஆலப்பாக்கம், பெரியபட்டு, புதுச்சத்திரம், கொத்தட்டை, பி.முட்லூர், சி.முட்லூர் புறவழிச்சாலையில் கீழமூங்கிலடி அருகே வலது பக்கமாக பிரிந்து, பாசிமுத்தான் ஓடையை கடந்து மணலூர் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையை சென்றடைகிறது.
இந்த பணிகள் அனைத்தும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 4 ஒப்பந்ததாரர்கள் மூலம் நடந்து வருகிறது. இதில் கடலூர் குடிகாட்டில் இருந்து சிதம்பரம் வரையிலான 52 கி.மீ. தூர சாலை பணிக்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலை 45 மீட்டர் அகல சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருந்து ராமாபுரம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியும், பாதிரிக்குப்பத்தில் கடலூர்-திருவந்திபுரம் சாலையின் குறுக்கேயும், கெடிலம் ஆற்றின் குறுக்கேயும் பாலம் கட்டும் பணிகள் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு தொடங்கியது.
50 சதவீத பணிகள்
இதற்காக சாலையின் இருபுறமும் மண் கொட்டி, ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் மூலம் பாலம் எழுப்பும் பணி நடக்கிறது. இதில் பாலம் பாதிரிக்குப்பத்தில் இருந்து ராமாபுரம் வரை அமைக்கப்பட உள்ளது. கடலூரில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை 50 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. இதில் கடலூர் பாதிரிக்குப்பத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மலைபோல் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பணிகள் நடைபெறாததால், குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணில் இருந்து புழுதி கிளம்புகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது நடக்கும் சாலை பணியால், ஏற்கனவே உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அகலப்படுத்தும் பணி
இதேபோல் குடிகாட்டில் இருந்து சிதம்பரம் வரை நடக்கும் சாலை அகலப்படுத்தும் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வழக்கமாக கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் சென்ற வாகன ஓட்டிகள், தற்போது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்ல 1½ மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
விரைந்து முடிக்க...
இதுகுறித்து சிதம்பரத்தை சேர்ந்த கணேஷ் கூறுகையில், சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் பல இடங்களில் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்காக பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் முழுமை பெறாமல் அரைகுறையாக கிடப்பதால், சாலை மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதிலும் மழை பெய்தால், சாலையில் கிடக்கும் மணலால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் குடிகாடு-சிதம்பரம் சாலையை கடந்து செல்வதை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவால் மிகுந்ததாக காணப்படுகிறது. எனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாகன ஓட்டிகள் அவதி
கடலூர் ஸ்ரீதர் கூறுகையில், கடலூர் பாதிரிக்குப்பத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக ஏராளமான லாரிகளில் மண் அள்ளிக் கொண்டு வரப்படுகிறது. இதனால் கடலூர்-திருவந்திபுரம் சாலையில் ஆங்காங்கே மணல் குவியல்கள் கிடக்கிறது. அவை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறுவதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் புழுதி பறக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நவம்பர் மாதம் முடிவடையும்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.என்.குப்பத்தில் இருந்து கடலூர் சிப்காட் வரையிலான பணியும், கடலூர்- சிதம்பரம் இடையிலான பணிகளும் வருகிற நவம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சாலை பணிகள் தீவிரமாக நடக்கிறது. கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நத்தப்பட்டு அருகே மேம்பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. அதுபோல் கெடிலம் ஆற்றின் குறுக்கே நடக்கும் பணியும் விரைந்து முடிக்கப்படும். அதன் பிறகு சாலை பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு, நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் கடலூரில் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.