4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் கொள்ளை: ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்


4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் கொள்ளை: ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72¾ லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அரியானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு திருவண்ணாமலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் வெல்டிங் எந்திரத்தின் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அவற்றில் இருந்த பணத்தை கொள்ளைடித்தனர்.

4 ஏ.டி.எம்.களில் இருந்தும் மொத்தம் ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே மாதிரியான எந்திரங்கள்

ஏ.டி.எம். மையங்களில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்கள் பல்வேறு வகையில் உள்ளன. இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 4 ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்களும் ஒரே மாதியானவை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வகை எந்திரங்களை பற்றி முழுமையான தொழில்நுட்பங்கள் தெரிந்த கைதேர்ந்தவர்களால் இந்த கொள்ளை சம்பவம் நடந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பணம் வைக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை நகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தி உள்ளனர்.

போலியான பதிவெண்

போலீசாருக்கு கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின்படி இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர். சுமார் 2 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் கொள்ளையடித்து விட்டு அவர்கள் தப்பி சென்று உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையர்கள் காரில் கள்ளக்குறிச்சி சாலை வழியாக வந்து வரிசையாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாடா சுமோ காரில் வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அவர்கள் வந்த காரின் பதிவெண் போலியானது என்பதும், அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் சென்று உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தனிப்படை போலீசார்

மேலும் போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களை கொண்டு தனிப்படை போலீசார் அரியானா, ஆந்திர மாநிலங்களுக்கு சென்று அந்த மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி போலீசார் தொடர்ந்து திருவண்ணாமலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபர்கள் எவரேனும் திருவண்ணாமலையில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனரா என்றும் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஜி. பேட்டி

இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கொள்ளை சம்பவத்தை ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரங்கள் பற்றிய தொழில்நுட்பங்களை நன்கு அறிந்த குற்றவாளிகள்தான் செய்து இருக்க வேண்டும்.

பணம் எடுக்கும் எந்திரத்தில் உள்ள அலாரத்தை செயல் இழக்க செய்து துல்லியமாக செயல்பட்டு உள்ளனர்.

ஏ.டி.எம். திருட்டில் ஈடுபட கூடிய குறிப்பிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த கும்பல் இந்த சம்பவத்தை செய்து உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தமிழக போலீசார் திறம்பட செயல்பட்டு கைது செய்தனர். இந்த குற்றவாளிகளும், தற்போது நடந்து உள்ள கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் ஒரே பகுதியில் இருந்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களை பிடிக்க 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் வெளிமாநிலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

6 போலீசார்ஆயுதப்படைக்கு மாற்றம்

இதற்கிடையே ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் நடந்த திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.


Next Story