கஞ்சா கடத்திய 4 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்
திருவள்ளுர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் 6 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தியவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜா (வயது45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்திய ராஜாவை கைது செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம் குப்பம்கண்டிகை ஊராட்சி, மணவூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்கள் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த சுரேஷ் (37), கோவில்பதாகையை சேர்ந்த சுரேஷ் (32) மற்றும் தக்கேலம் சஞ்சிராயன்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (21) என்பது தெரிந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.