2 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
2 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருச்சி மாவட்டம் குண்டூர் பர்மா காலனியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை 4 பேர் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
4 பேர் கைது
உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த முருகசடாசரம் (வயது 34), பழனிவேல் (34), கருப்பையா (60), புதுக்கோட்டை மாவட்டம், மங்களத்துப்பட்டியை சேர்ந்த செல்வகணபதி (27) என்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி, சரக்குவாகனம், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள பள்ளத்தூரை சேர்ந்த சரவணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
வரதட்சணை கொடுமை; கணவர் மீது வழக்கு
*திருச்சி மேலசிந்தாமணி விக்னேஷ் கார்டனை சேர்ந்த கேத்தரின் பிரிசில்லா(28). இவரது கணவர் ரெக்ஸ் அருண்குமாரின் உறவினர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கேத்தரின் பிரிசில்லா திருச்சி மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் ரெக்ஸ் அருண்குமார், அவரது உறவினர்கள் சுசீலாமேரி(63), பிரேம்குமார் ஆரோக்கியராஜ்(36), பிரிட்டோ (40), ரிபா (36) ஆகியோர் மீது கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாடியவர்கள் கைது
*திருச்சி ராம்ஜிநகர் நியூ காட்டூர் சுடுகாட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடிய தில்லைநகர் செந்தில்குமார்(41), உறையூர் செந்தில்(43), புங்கனூர் ராஜா(42), தென்னூர் பாஸ்கர் (வயது 33) ராம்ஜிநகர் சக்திவேல்(60), வரகனேரி பாலகிருஷ்ணன்(41) ஆகியோரை ராம்ஜிநகர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராம்ஜிநகர் கோனார்குளம் கலிங்கி வாட்டர் டேங்க் பின்புறம் சூதாடிய அல்லித்துறை கார்த்திக்(27), சோமரசம்பேட்டை உஸ்மான் அலி(40), வரகனேரி ரங்கன்(48), பாலக்கரை அருண்(38), கே.கே.நகர் சுதாகர்(25), திருவெறும்பூர் சம்பத்(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்தை கைப்பற்றினர்.
*வையம்பட்டியை அடுத்த பாம்பாட்டிபட்டியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளரான சண்முகானந்தத்தின் மகன் ஜீவபாரதி(24). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து ைவயம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
*குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(45). இவரும், இவரது உறவினர் அண்ணாமலை மகன் நடராஜும்(55) ஒரு மோட்டார் சைக்கிளில் தச்சன்குறிச்சியில் இருந்து குமுளூர் நோக்கி சென்றனர். பெரிய ஏரி அருகே வந்தபோது கடைக்கால் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த தமிழரசன் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை மிரட்டல்
*துறையூர் வட்டம். ஈச்சம்பட்டியை சேர்ந்த ராகுலும்(24), ஜூலி(19) என்பவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து ஜூலி முசிறி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல், அவரது தாய் ராஜாத்தி ஆகியோர் விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்தனர். பின்னர் அவர் ெவளியே வந்தபோது ஜூலி, அவரது தந்தை விமலேந்திரன்(45), தாய் பரமேஸ்வரி (39) ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ராகுல் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, விமலேந்திரனை கைது செய்தனர்.