மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இருந்த தொழிலாளி அடித்துக்கொலை
வேதாரண்யத்தில், மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிகிச்சை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தில், மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிகிச்சை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சிகிச்சை மையத்தில் மதுபோதையை மறப்பதற்காக 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு ஊராட்சி கரையங்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன்(வயது 47) என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று மறுவாழ்வு மையத்தின் பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதையடுத்து சிகிச்சை மையத்தை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதனிடையே சிகிச்சை மையத்தினர் முருகேசன் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்ததால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முருகேசன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிகிச்சை மைய உரிமையாளர் மணிகண்டன்(36), மேலாளர் வேல்முருகன்(38), பணியாளர்கள் ஷியாம் சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
'சீல்' வைப்பு
முன்னதாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த சரண்ராஜ்(32), பிரபாகரன்(35), பாலமுருகன்(25) ஆகிய 3 பேரும் காயம்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மீதம் இருந்த 26 பேரில் 17 பேரை வேதாரண்யத்தில் உள்ள பல்நோக்கு சேவை கட்டிடத்துக்கும், 9 பேரை நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் வேதாரண்யம் உதவி கலெக்டர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு 'சீல்' வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டின் கையைப்பிடித்து கதறல்
மையத்தில் சிகிச்சையில் இருந்தவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டின் கையைப்பிடித்து கண்ணீர் விட்டு கதறினர். அப்போது அவர்கள் அந்த மையத்தில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், தங்களை இங்கிருந்து விடுவிக்கும்படியும் வலியுறுத்தினர்.
அவர்கள் கூறியதை கேட்டு போலீஸ் சூப்பிரண்டும் கண்கலங்கினார். மறுவாழ்வு மையத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிருபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.