சாராயம் கடத்தி வந்த 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் ரோந்து
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்வேளூர் போலீசார் கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் வந்த ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நாகை வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது42), பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த செந்தில் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
சாராயம் கடத்தல்
இதேபோல் ஓர்குடி வெட்டாறு பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு ஸ்கூட்டரில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இவர்களும் சாராயணம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் இவர்கள் ஓர்குடி மேலத்தெருவை சேர்ந்த மணியரசன் மகன் மணிமாறன் (21). ஆழியூர், பாமினி பகுதியை வீரக்குமார் மகன் நவீன் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து, சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 ஸ்கூட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.