3-வது வார பூச்சொரிதல் விழா; பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு


3-வது வார பூச்சொரிதல் விழா; பக்தர்கள் பூக்கள் சாற்றி வழிபாடு
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலின் பூச்சொரிதல் விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சமயபுரம் கடைவீதி வியாபாரிகள், தொழிலாளர்கள், பூர்வீக குடிமக்கள் சார்பாக பூக்கள் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டது.

முன்னதாக கடைவீதியில் ஆண்டவர் சன்னதியில் உள்ள கருப்பண்ணசாமி, மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து யானை மீது பூக்களை எடுத்துவர மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க கடைவீதி, தேரோடும் வீதி, கொடிமரம் வழியாக கோவிலுக்குள் சென்று பூக்களை சாற்றினர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாகனங்களில்...

விழாவை முன்னிட்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

---

Image1 File Name : P_Sakthivel-16272651.jpg

----

Reporter : P.Sakthivel Location : Trichy - Samayapuram


Next Story