சென்னையில் இன்று ஒரே நாளில் 3,926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு..!
சென்னையில் இன்று ஒரே நாளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்திற்காக 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர தணிக்கையால் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து வந்தாலும், பின்னால் அமர்ந்து வருபவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமெனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும், கடந்த சனிக்கிழமை சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை முழுவதும் இன்று போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று ஒருநாள் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்திற்காக மாலை 6 மணி நேர நிலவரப்படி 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியவர்கள் மீது 1903 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் பைக்கின் பின் இருக்கையில் சென்றவர்கள் மீது 2023 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.