ஆட்டோக்களில் சுற்றுலா வந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்


ஆட்டோக்களில் சுற்றுலா வந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 17 ஆட்டோக்களில் சுற்றுலா வந்தனர். இவர்கள் 9 நாட்களில் 1,200 கிேலா மீட்டர் தூரத்தை கடந்து வந்தனர்.

கன்னியாகுமரி

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 17 ஆட்டோக்களில் சுற்றுலா வந்தனர். இவர்கள் 9 நாட்களில் 1,200 கிேலா மீட்டர் தூரத்தை கடந்து வந்தனர்.

சுற்றுலா பயணம்

சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 16 ஆண்டுகளாக வெளிநாட்டினர் பங்கு பெறும் 'ஆட்டோ சேலஞ்' என்ற ஆட்டோ சுற்றுலா பயணத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வெளிநாட்டினர் பங்கு பெற்ற 'ஆட்டோ சேலஞ்' சுற்றுலா பயணம் கடந்த 28-ந் தேதி சென்னையில் தொடங்கியது.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, எத்தோபியா, போலந்து ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 37 சுற்றுலா பயணிகள் 17 ஆட்டோக்களில் தனி அணிகளாக புறப்பட்டனர். அவர்களே ஆட்டோக்களை ஓட்டி சென்று சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்த்தனர்.

கன்னியாகுமரியில் வரவேற்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, வழியாக நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரி வந்தடைந்தனர். மொத்தம் 1,200 கிலோ மீட்டர் தூரத்தை 9 நாட்களில் கடந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஓட்டலில் தமிழக பாரம்பரிய கலாசார முறைப்படி சங்கு மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர். இரவு ஓட்டலில் தங்கி விட்டு நேற்று காலையில் சூரிய உதயம் பார்த்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து 17 ஆட்டோக்களில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.


Next Story