14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு வந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்


14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு வந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
x

14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு வந்த 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

தஞ்சாவூர்

10 நாளில் 1,500 கி.மீ. தூரம் ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 37 பேர் நேற்று தஞ்சை வந்தனர். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து அவர்கள் வியந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளவில்லை.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியதையடுத்து சென்னையில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவனந்தபுரம் வரை ஆட்டோக்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

1,500 கி.மீ. தூரம் பயணம்

இதில் கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 நாடுகளை சேர்ந்த 37 சுற்றுலா பயணிகள் 1500 கி.மீ ஆட்டோவில் பயணித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் இருந்து கடந்த 28-ந்தேதி பயணத்தை தொடங்கினர். அங்கிருந்து புதுச்சேரி வழியாக நேற்று முன்தினம் இரவு தஞ்சையை வந்தடைந்தனர். தஞ்சையில் தங்கிய அவர்கள் நேற்று காலை தஞ்சையில் இருந்து ஆட்டோக்களில் புறப்பட்டனர்.

இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, நியூசிலாந்து. இஸ்டோனியா ஆகிய 5 நாடுகளை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 37 சுற்றுலா பயணிகள் 14 ஆட்டோக்களில் வந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே ஆட்டோக்களை இயக்கி வந்தனர். பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக ஒரு ஆட்டோவில் மெக்கானிக்கும் கூட வந்திருந்தனர்.

பெரியகோவிலுக்கு சென்றனர்

தஞ்சையில் இருந்து ஆட்டோக்களில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெரிய கோவிலை சுற்றிப்பார்த்து வியந்ததோடு, ஒவ்வொரு வரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக தஞ்சையில் தங்கிருந்த ஓட்டல் முன்பும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தஞ்சையில் இருந்து புறப்பட்ட சுற்றுலா பயணிகள், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மேலூர் வழியாக மதுரை சென்றடைந்து இரவு அங்கு தங்குகிறார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக வருகிற 6-ந்தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர். இவர்கள் செல்லும் வழித்தடங்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிடுகின்றனர்.


Next Story