3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கற்கருவிகள்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் பா.தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கந்திலி அருகிலுள்ள சுடுகாட்டூர் என்ற இடத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால தடயங்களான கற்கருவிகள் மற்றும் அவற்றை கூர்மைப்படுத்திய இடம் உள்ளிட்டவற்றை கண்டறிந்தனர்.
இது குறித்து ஆ.பிரபு கூறியதாவது:-
கலை நுட்பத்துடன்
கந்திலி அருகே சந்திரபுரம் மலை அடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் மேற்கொண்ட கள ஆய்வில் புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளை கண்டறிந்தோம். சுடுகாட்டூருக்கும், சந்திரபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மாந்தோப்பின் நடுவே 20 மீட்டர் சுற்றளவு கொண்ட பாறை ஒன்று காணப்படுகிறது. அதன் நடுவே இயற்கையாக அமைந்த சுனை ஒன்று காணப்படுகின்றது.
இந்த சுனையின் அருகாமையில் இரண்டு இடங்களில் புதிய கற்கால மக்கள் கற்கருவிகளை கூர்மைப்படுத்தவும், பளபளபாக்கவும் செய்த தடயங்கள் காணப்படுகின்றன. இப்பாறையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சந்திரபுரம் மலையில் இருந்து வரும் ஓடை ஒன்றும் காணப்படுகிறது. அந்த ஓடையில் மேற்கொண்ட ஆய்வில் நான்கு கல் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை நன்கு தேய்த்து பளபளப்பாக்கப்பட்டவையாகும்.
இந்த வகைக் கற்கருவிகள் புதியகற்கால மக்கள் பயன்படுத்தியவையாகும். கற்கருவிகள் பெரும்பாலும் கற்கோடரிகளாக பயன்படுத்தப்பட்டவையாக தெரிகிறது. 12 செ.மீ நீளம் கொண்ட மூன்றும், 6 செ.மீ நீளம் கொண்ட ஒன்றும் என நான்கு கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. 6 செ.மீ நீளம் கொண்ட கருவி கலைநுட்பத்துடன் அமைந்துள்ளது.
கோடரிகளாக
இவர்கள் பயன்படுத்திய கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டு வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் கற்கோடரிகளாக பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய மக்களே சந்திரபுரம் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இங்கு கண்டறியப்பட்ட கற்கருவிகளும், தடங்களும் சான்றுகளாக அமைகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட நிலையில் கற்கால கருவிகள் கண்டறியப்பட்டது மேலும் வலுசேர்ப்பதாக அமைகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.