35 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கம்


35 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்  தேக்கம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் 35 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் 35 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா, தாளடி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களில் பயிர்கள் சேதம் அடைந்தன.

தொடர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த மாத இறுதியில் பெய்த தொடர் மழையால் சாய்ந்து சேதம் அடைந்தன. இதன் காரணமாக அறுவடை பணிகள் 10 நாட்கள் தாமதம் அடைந்து மீண்டும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை பணி

அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் வரை 80 ஆயிரத்து 772 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 46 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் ெரயில்கள் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேங்கிக்கிடக்கும் 35 ஆயிரம் டன் நெல்

மேலும் 35 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் வரை தேங்கிக் கிடப்பதால் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக திறந்தவெளியை நெல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்படும் நெல் மூட்டைகள் மழை பெய்தால் சேதமடைவதால் நேரடியாக ெரயில் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் போதிய ெரயில் வேகன்கள் கிடைக்காமல் பணிகள் தாமதம் அடைந்து வருகின்றன.

நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

இதனை கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதல் ெரயில் வேகன்கள் மூலம் வெளிமாவட்ட அரவை பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் சித்தர்காட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு எடுத்து செல்வது வழக்கம்.

தற்போது வரை லாரிகள் வராததால் அனைத்து நேரடிகள் கொள்முதல் நிலையங்களிலும் தேங்கி கிடைக்கும் நெல் மூட்டைகளை விவசாயிகள், மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story