பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைப்பு
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை பகுதியில் 320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலம்
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந்தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், சுமார் 400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளை ஆற்றில் கரைக்கும் விசர்ஜன ஊர்வலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் என பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றங்கரையில் சிலைகள் இறக்கப்பட்டு. அங்கு வழிபாடு நடத்தி அதன் பிறகு சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.
கரைப்பு
அதேபோல் ஆனைமலை மற்றும் ஆழியார், கோட்டூர் பகுதிகளிலும் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, உலக நலவேள்விக்குழுவினரும் விநாயகர் சிலைகளை அற்றில் கரைத்தனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. நேற்று கோமங்கலம் பகுதியில் இந்து முன்னணி, பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த 28 சிலைகள் கெடிமேடு பி.ஏ.பி.வாய்காலில் கரைக்கப்பட்டது. சுல்தான்பேட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த 20 சிலைகள் செஞ்சேரி பிரிவில் உள்ள வாய்காலில் கரைக்கப்பட்டன.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரம், அண்ணாநகர், கல்லாங்காட்டு புதூர், பகவதி பாளையம், தாமரைக்குளம், மாளேகவுண்டன்பாளையம், கோவில்பாளையம், கோடங்கி பாளையம், சிங்கையன் புதூர், சொக்கனூர், கொண்டம்பட்டி.அரசம்பாளையம், உள்ளிட்ட பல இடங்களில் இந்து முன்னணி, பொதுமக்கள் சார்பில் மொத்தம் 42 சிலைகள் அமைக்க கிணத்துக்கடவு போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்துமுன்னனி சார்பில் வைக்கப்பட்ட 26 சிலைகளும் மேளதாளம் முழங்க கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றிற்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து முன்னணியின் மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.இதில் கோட்ட செயலாளர் அசோக்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 26 விநாயகர் சிலைகளும் கிணத்துக்கடவு தேரோடும்வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு வழியாக பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.