திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 3,172 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்

லோக் அதாலத்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரான எஸ்.செல்வசுந்தரி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

3,172 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6,351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3,070 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

மொத்தம் 6,453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3,172 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story