தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வினை பிளஸ்-1 மாணவர்கள் 3,126 பேர் எழுதினர். 124 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு
தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் கடந்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 1,500 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 22 மாதங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1 பயின்று வரும் மாணவ-மாணவிகளில் 3,250 பேர் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
3,126 பேர் எழுதினர்
இந்த தேர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தேர்வு நடந்தது. ஒரே வார்த்தையில் விடையளித்து, அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ஷேட் செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் இலக்கிய திறனறி தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 3,126 பேர் ஆர்வத்துடன் எழுதினர். 124 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வினை அரசு தேர்வுகள் துணை அதிகாரிகள், அந்தந்த மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலா்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 43 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.1,500 பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.