பரங்கிமலையில் ரூ.100 கோடி அரசு நிலம் மீட்பு 31 பேர் கைதாகி விடுதலை
பரங்கிமலையில் ரூ.100 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 31 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
பரங்கிமலை,
சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41 ஆயிரத்து 952 சதுர அடி நிலம் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இந்த நிலம், வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் என தாக்கலாகியுள்ளது. இதனை கோவில் பயன்பாட்டுக்கு தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த இடம் கோவில் பயன்பாட்டுக்கு பயன்படாமல் பிற நபர்களால் 'வன்னியர் சங்க கட்டிடம்' என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசுக்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமலும் இருந்து வருகிறது.
எனவே, அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்ற தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6 ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு செய்தவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில், வருவாய் நிலையாணை எண் 29-ன் பிரிவு 13-ன் படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அரசின் வசம்கொண்டு வரும் வகையில் 'சீல்' வைத்தனர். ேமலும் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைத்தனர்.
இந்த இடம் தற்போது சென்னை மெட்ரோ ெரயில் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னியர் சங்க கட்டிடத்தில் தங்கி இருந்த 31 பேர் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பரங்கிமலை துணை கமிஷனர் தீபக் சுவாச், உதவி கமிஷனர் முரளி உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
பா.ம.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே. மூர்த்தி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் அங்கு வந்து போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏ.கே.மூர்த்தி கூறும்போது, "40 வருடங்களுக்கு முன் தனி நபரிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் நிர்வகித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ள கட்டிடத்தை முன்னறிவிப்பும் இன்றி திடீரென வருவாய்த் துறையினர் 'சீல்'் வைத்துள்ளனர். இந்த நிலத்துக்கு வருவாய்த்துறை, ராணுவம், இந்து அறநிலையத்துறை என 3 பிரிவினர் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். பல ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள நிலம் என்ற அடிப்படையில் வன்னியர் சங்கத்திற்கு குத்தகைக்கு விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான தொகையை எந்த துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால் அதை செலுத்துவதற்கு தயாராக உள்ளோம்" என்றார்.
கைதான 31 பேரில் 5 பேர் மாணவர்கள் என்பதால் அவர்களை தாம்பரம் அரசு விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கைதாகி இருந்த மற்ற 26 பேரும் மாலையில் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலத்தின் உரிமை தொடர்பாக வன்னியர் சங்கத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வருவாய்த்துறையின் இந்த செயல் தவறானது என வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.