மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் 31 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில்  31 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் 31 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

மதுரை

மதுரை கரிமேட்டில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இட நெருக்கடி காரணமாக இந்த மார்க்கெட் தற்காலிகமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் பின்புறம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை மார்க்கெட் கரிமேடு பகுதிக்கு மீண்டும் கொண்டு வரப்படவில்லை. மொத்த மீன் மார்கெட்டினை, மதுரை கோச்சடை லாரி நிலையம் அருகே இடமாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் சிலரின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை மாநகராட்சி கைவிட்டது. எனவே மொத்த மீன்மார்க்கெட்டை எங்கு இடமாற்றம் செய்யலாம் என மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.

தற்காலிமாக செயல்பட்டு வரும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில், மாநகராட்சி அனுமதித்த கடைகளுக்கு மேல் கூடுதல் கடைகள் முளைத்தன. இந்த கடைகளுக்கு சில தனிநபர்கள் வாடகை வசூலித்ததாக தெரிகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி அனுமதி பெறாமல் 31 கடைகள் இருப்பது தெரியவந்தது. மேயர் இந்திராணி உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து மேயர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கரிமேட்டில் மாதாந்திர வாடகை அடிப்படையில் செயல்பட்ட 72 மீன் கடைகள் கொரோனா காலத்தில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 31 கடைகள் உரிய அனுமதி பெறாமல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு மாதாந்திர வாடகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படும் விதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. அவற்றை அகற்ற பல முறை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அகற்றப்படாமல் இருந்ததால் 31 கடைகளையும் மாநகாட்சி அகற்றியது. மேலும் மாநகராட்சியின் எல்லைக்குள் அனுமதி பெறாத கடைகள், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றம் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story