ராமேசுவரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 300 கிலோ கடல் பசு...! கப்பல் மோதியதா...?


ராமேசுவரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 300 கிலோ கடல் பசு...! கப்பல் மோதியதா...?
x

ராமேசுவரம் அருகே சுமார் 300 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்சல சந்தி கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் கடல் பசு என்பது மிகவும் அழிந்து வரக்கூடிய ஒரு உயிரினமாகும். குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்சல சந்தி கடல் பகுதியில் கடல் பசு என்பது மிக மிக குறைவாக உள்ளதாகவே வனத்துறையினர் நடத்திய ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடற்கரையில் அடிபட்டு இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. கரை ஒதுங்கி கிடந்த இந்த கடல் பசுவை மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரை ஒதுங்கிய கடல் பசுவானது சுமார் 5 அடி நீளமும் 300 கிலோ எடையும் இருந்ததாக கூறப்படுகின்றது. தொடர்ந்து கால்நடை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கடல் பசுவானது கடற்கரையிலேயே பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்கப்பட்டது.

கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த இந்த கடல் பசுவை அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆழ்கடலில் நீந்தும் போது ஏதேனும் கப்பல் அல்லது பாறைகளில் மோதியோ மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


Next Story