மீன் பிடிக்க ஏரி மதகை உடைத்த மர்மநபர்கள்; 300 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்


வந்தவாசி அருகே மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைத்ததில் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கி நாசமானது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இது மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைத்து உள்ளனர். இதனால் கடைசிக் குளம் கிராம பகுதியில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி சுமார் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

இதனால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மணல் மூட்டைகள் கொண்டு ஏரியின் மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை வெளியே வராத அளவிற்கு சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி மதகை உடைத்தது மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story