தமிழகத்தில் 30 ஆயிரம் இளம் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் பேட்டி
தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும். .இவ்வாறு அவர் தெரிவித்தார்.