சுதந்திர தினத்தன்று மது விற்ற 30 பேர் கைது


சுதந்திர தினத்தன்று மது விற்ற 30 பேர் கைது
x

சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் மது விற்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்களை மூட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி, மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடப்பட்டன. ஆனால் மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்தது. அதனை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, மதுவிற்பனை செய்தவர்களை கைது செய்தனர்.

சின்னமனூர் அருகே மூர்த்திநாயக்கன்பட்டியில் ஓடைப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகில் மது விற்ற தப்புக்குண்டுவை சேர்ந்த சுருளிநாதன் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,020 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதுபோல், அல்லிநகரத்தில் மது விற்ற பிராதுகாரன்பட்டியை சேர்ந்த சுப்பையன் (61) என்பவரையும், டொம்புச்சேரியில் மது விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மது விற்பனை செய்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 2,072 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story