யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் சாவு கிராம மக்கள் சாலைமறியல்


யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் சாவு  கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Oct 2023 2:30 AM IST (Updated: 7 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்.

மதுரை

உசிலம்பட்டி,


30 ஆடுகள் சாவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் தனுஷ்கோடி, மலைராஜன்.

சகோதரர்களான இவர்கள் சுமார் 60 ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலு க்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து தண்ணீர் குடிக்க வைத்தனர்.

தண்ணீர் குடித்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. பின்னர் சிறிதுநேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்தன. இதையடுத்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து தீவிர சிகிச்சை அளித்து மற்ற ஆடுகளை காப்பாற்றினர்.

இறந்த ஆடுகளின் உடல்களை பரிசோதனை செய்த கால்நடை டாக்டர்கள், ஆடுகள் குடித்த தண்ணீரில் யூரியா கலக்கப்பட்டு இருந்ததால் அவை இறந்ததாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் ஆடுகள் குடிக்கும் நீரில் யூரியாவை கலந்து 30 ஆடுகள் இறப்புக்கு காரணமாக இருந்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மற்றும் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story