183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி கடன் உதவி
தேனியில் 183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தொழிற்கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் கடன் வழங்கும் வகையில் இந்த முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, 183 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 7 லட்சத்தில் கடன் உதவியை வழங்கி பேசினார். முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், தாட்கோ மேலாளர் சரளா மற்றும் வங்கி அதிகாரிகள், தொழில் முனைவோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.