தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
கொடைக்கானல் அருகே பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கொடைக்கானல் அருகே உள்ள பாச்சலூர் பேத்தரைப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 58). பாச்சலூர் கரடிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் என்ற சிவா (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவரின் பங்களா வீட்டில் வேலை பாா்த்தனர். இந்நிலையில் சிவனை, சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு நிறுத்திவிடுவதாக மாரிமுத்து எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவா இந்த பிரச்சினைக்கு ராணி தான் காரணம் என்று அவரை தாக்க திட்டமிட்டார்.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி நள்ளிரவு ராணியின் வீட்டிற்கு சிவன் சென்றார். அங்கு வைத்து சிவா, ராணியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர். இந்த வழக்கு கொடைக்கானல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட சிவனிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.