ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

பிறப்பு சான்றிதழ் சம்பந்தமான விவரங்களை வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவள்ளூர்

பிறப்பு சான்றிதழ்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது அண்ணன் மகன் பிரேம்குமார் என்பவரை பள்ளியில் சேர்ப்பதற்காக பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டதால் சுரேஷ்குமார் கடந்த 07-03-2011 அன்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தன் அண்ணன் மகனின் பிறப்புச் சான்றிதழ் சம்பந்தமாக கேட்டார். அப்போது நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்ததால் அங்கு சென்று அவரது பிறந்த விவரங்களை வாங்கி வருமாறு தெரிவித்தனர்.

ரூ.500 லஞ்சம்

இதையடுத்து சுரேஷ் குமார் கடந்த 9-3-2011 அன்று திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை உதவியாளர் லோகநாதன் என்பவரிடம் தன் அண்ணன் மகன் பிறந்த விவரங்களை தருமாறு கேட்டார். அதற்கு லோகநாதன் சிறுவனின் பிறந்த விவரங்களை கொடுப்பதற்கு தனக்கு லஞ்சமாக ரூ.500 கொடுத்தால் தான் குழந்தை பிறந்த விவரத்தை கொடுக்க முடியும் என தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.500 பணத்தைக் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை லோகநாதன் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து லோகநாதனை கையும் களவுமாக பிடித்தனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கினை விசாரித்த திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரஸ் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இளநிலை உதவியாளர் லோகநாதனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story