லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை
லஞ்ச வழக்கில் சிக்கிய மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.40 ஆயிரம் லஞ்சம்
சென்னை பல்லாவரம் அருகே உள்ள கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). மர வியாபாரி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது கடைக்கு மின் கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் கடையில் இருந்த மின் இணைப்பை துண்டித்தனர். மீண்டும் மின் இணைப்பு வழங்கக்கோரி பல்லாவரம் கன்டோன்மென்ட் மின்சார வாரிய அலுவலகத்தில் ஆறுமுகம் விண்ணப்பம் செய்தார்.
இந்த அலுவலகத்தில் உதவி மின்வாரிய என்ஜினீயராக பணிபுரிந்து வந்த சுகுமார் (வயது 62), என்பவர் மர வியாபாரி ஆறுமுகத்தின் கடைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்ச பணமாக கேட்டுள்ளார்.
மின்வாரிய என்ஜினீயருக்கு சிறை
லஞ்சம் கொடுத்து மின் இணைப்பு பெறுவதற்கு மனமில்லாமல் மர வியாபாரி ஆறுமுகம் சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனை பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை உதவி மின்வாரிய என்ஜினீயர் சுகுமாரிடம், மர வியாபாரி ஆறுமுகம் கொடுக்கும்போது கையும் களவுமாக உதவி மின்வாரிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் சுகுமாரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு செங்கல்பட்டு கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.