ஆவடி அருகே வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


ஆவடி அருகே வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x

ஆவடி அருகே வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை

ஆவடியை அடுத்த பொத்தூர், ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 32), பெயிண்டர். இவருடைய மனைவி ரம்யா (26). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் வீட்டுக்குள் புகுந்த 10 பேர் கும்பல், அங்கு படுத்து இருந்த யோகேஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ரம்யா, தனது கணவரை விட்டு விடும்படி கெஞ்சினார். ஆனால் அந்த கும்பல் மனைவி கண் எதிரேயே, ஒரே அரிவாளை ஒவ்வொருவராக வாங்கி யோகேஸ்வரனின் கழுத்து, முகம், தலை, இடுப்பு, முதுகு, கை உள்பட உடலின் பல இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

2016-ம் ஆண்டு யோகேஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து மீன் வியாபாரியான அதே பகுதியை சேர்ந்த சுறா என்பவரை வெட்டிக்கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு பழிக்குப்பழியாக சுறாவின் மகன்கள் மற்றும் உறவினர்கள் யோகேஸ்வரனை கொலை செய்தது தெரிந்தது.

ஆவடி போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 உதவி கமிஷனர்கள் மற்றும் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story