3 போலீஸ்காரர்கள் பணியிடைநீக்கம்
3 போலீஸ்காரர்கள் பணியிடைநீக்கம்
திருப்பூர்
பெருமாநல்லூர் அருகே ரோட்டோரம் கடந்த 17-ந் தேதி இரவு காரை நிறுத்தி ஆண், பெண் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர்கள் தனபால், தமிழ்அரசன், கதிரவன் ஆகியோர் ரோந்து சென்றுள்ளனர். கார் நிற்பதை பார்த்ததும், காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் உறவினர் என்று தெரிவித்தும் அவர்களிடம் கார் எண், பெயர் விவரம், காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விசாரித்தனர்.
அதன்பிறகு அவர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள், ரூ.34 ஆயிரத்து 500-ஐ போலீஸ்காரர்களுக்கு கொடுத்தனர். அவர்கள் அதை பெற்று பங்குபிரித்துக்கொண்டதாக தெரிகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட 2 பேரும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாயை சந்தித்து நடந்த விவரத்தை கூறி புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து 3 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர்கள் தமிழ்அரசன், கதிரவன், தனபால் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.