பள்ளி தாளாளர்-செயலாளர் உள்பட 3 பேர், மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து


பள்ளி தாளாளர்-செயலாளர் உள்பட 3 பேர்,   மதுரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து
x

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பள்ளிக்கூட தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் மதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டனர்.

மதுரை

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த பள்ளிக்கூட தாளாளர், செயலாளர் உள்பட 3 பேர் மதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டனர்.

மாணவி ஸ்ரீமதி மர்ம சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி், மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு, இதில் ஆசிரியைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட மற்ற 3 பேர் மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தது.

எத்தனை நாள்?

அதைத் தொடர்ந்து அவர்களுக்கான நிபந்தனை ஜாமீன் உத்தரவு சேலம் மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டு, சிறையில் இருந்து விடுக்கப்பட்டனர்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி பள்ளித்தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று காலை வந்து, மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அதேபோன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் வந்து கையெழுத்திட்டனர்.

அவர்கள் எத்தனை நாள் மதுரையில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டபோது, அதற்கான தேதியை தற்போது கோர்ட்டு தெரிவிக்கவில்லை என்றும், அதுபற்றிய கோர்ட்டு உத்தரவு வரும் வரை மதுரையில் தங்கி கையெழுத்திட வேண்டி இருக்கும் என போலீசார் கூறினர்.


Related Tags :
Next Story