பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து
கடையநல்லூர் அருகே பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாலுகா திரிகூடபுரம் பஞ்சாயத்து காந்தி நகர் காலனியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் காளிமுத்து மகன் காளிதாஸ், சகோதரர் காளிமுத்து, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கருப்பசாமி ஆகியோர் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிச்சையா பாண்டி மகன் வெள்ளத்துரை (வயது 38) என்பவர் தனது வீட்டின் முன்பு நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு திடீரென காணாமல் போனதாகவும், இதனை சரிசெய்யுமாறு காளிதாஸிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உடனே வெள்ளத்துரை வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து அவர்கள் மூவரையும் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த 3 பேரும் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர். மேலும் வெள்ளத்துரையின் புகாரின் பேரில் காளிதாஸ் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.